தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[4] இந்தியாவில் கி்டைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகாலில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.[5] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.
No comments:
Post a Comment